கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல்லா அஜீஸ் (55). இவருக்கு சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்க அஜீஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அப்துல் அஜீஸை நேரில் சந்தித்துள்ளனர்.
தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், உங்களது இடங்கள் எதையாவது விற்க வேண்டும் என்றால் நாங்கள் விற்று தருகிறோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து கோவைக்கு வந்த அஜீஸிடம், சிறிய பாத்திரத்தில் இரிடியும் போன்ற பொருள் ஒன்றையும் காண்பித்துள்ளனர்.
இது 100% சக்தி வாய்ந்தது என்றும், இதனுடைய விலை ரூ.2 கோடி ரூபாய் என்றும் கூறி இருக்கின்றனர். இதனை வாங்கி உடனே விற்றால் 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அப்துல் அஜீஸ் 2 கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றபிறகு அவர்கள் அந்த பொருளையும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அப்துல் அஜீஸ் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் அபூபக்கர், ஜான் பீட்டர் , செந்தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில் குமார் உட்பட அவர்களது கூட்டாளிகள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.