கோவை, வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தது. வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் மட்டம் என்ற இடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி அப்சரா மற்றும் அவரது தாயும் அருகில் உள்ள சிற்றோடை பகுதிக்கு சென்றுள்ளனர்.
மேலும் பல சிறுவர்களும் அவர்களோடு சென்றுள்ளனர். அப்போது அருகில் உள்ள வனத்திற்குள் இருந்து வந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. அதை கண்டு அருகில் இருந்த அனைவருமே கூச்சலிட்டனர். தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சிறுத்தையிடம் இருந்து குழந்தையை மீட்க போராடினர். ஆனால் சிறுத்தை தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. தொடர்ந்து மக்கள் சிறுத்தையை விரட்ட முயற்சி செய்த நிலையில் சிறுத்தை சிறுமியை விட்டுவிட்டு வனத்திற்குள் சென்றது.
இதில் குழந்தையின் கழுத்து மற்றும் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து காவல் மற்றும் வனத் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.