தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவியை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவை தமிழக ஆளுநர் தொடக்கிவைத்தார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்புரையாற்றி பேசியதாவது:
இப்பட்டமளிப்பு விழாவில், 100 மாணவர்கள் முனைவர்ப் பட்டமும், 86 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர்ப் பட்டமும், 212 மாணவர்கள் முதுநிலைப் பட்டமும், 2 மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டமும், 2 மாணவர்கள் கல்வியியல் நிறைஞர்ப் பட்டமும், 190 மாணவர்கள் இளங்கல்வியியல் பட்டமும், 55 மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பின் வழியாக இளங்கலைப் பட்டமும், வளர்தமிழ் மையத்தின் வழியாக 8 மாணவர்கள் முதுகலைப் பட்டமும் 13 மாணவர்கள் இளங்கலைப் பட்டமும், 384 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் வழியாக இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டமும் பெறுகிறார்கள். முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை வழங்கும் தங்கப் பதக்கங்களை 8 மாணவர்கள் பெறுகிறார்கள். பட்டம் பெறும் அனைத்து மாணவர்களையும் பாராட்டி, வாழ்த்தி வரவேற்கிறேன் என்றார்.
மொழிக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்…
பின்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் பேசியதாவது: இந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஒரு மொழிக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழ் இனமே பண்பாட்டின் அடையாளமாகத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு வீறுநடை இட்டுப் பயணப்பட்ட தமிழ்மொழி, இன்று அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று ஐந்தமிழாக வளர்ந்து காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, உலகமொழிகளுக்கு முன்னோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.
இதனையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்த விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இணைவேந்தரும் தமிழக அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதற்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையால் அமைச்சர் பங்கேற்காமல் இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அமைச்சரை வரவேற்று தமிழ்ப் பல்கலைகழகத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.