Skip to content
Home » கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு…..தமிழக அரசு உத்தரவு..

2023-2024  அரவைப் பருவத்திற்கு  சர்க்கரை  ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247.00  கோடி வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215    

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், 2024-25 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஒன்றிய அரசு 2023-24 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2919.75/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு  ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247.00 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3134.75/-    

அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75/- விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247.00 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!