விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தவெக மாநாட்டினையொட்டி, பணிக்குழுக்களுக்கான பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அம்மாபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு 30 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்குழுக்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
இந்த பயிலரங்கினை தொடங்கி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த வாரம் தளபதி தலைமையில் நமது வெற்றி மாநாடு நடக்க உள்ளது. அதில் தளபதி விஜய் உங்களை சந்திக்க உள்ளார். நாம் தற்போது அரசியல் பயணத்தை நடத்த இருக்கிறோம். முதலில் ரசிகர் மன்றம், பின்னர் நற்பணி மன்றம், மக்கள் இயக்கமாக இருந்தது. இன்று அரசியல் இயக்கமாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கடுமையான உழைப்பால் உருவாகி இருக்கிறது. தற்போது எங்கு பார்த்தாலும் நமது கட்சி கொடி பறக்கிறது. இந்த பயிலரங்கத்தில் கூறுவதைக் கேட்டு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இனி அப்பா அம்மா காலில் மட்டுமே நீங்கள் விழ வேண்டும். மற்றவர் காலில் விழக்கூடாது. என்னை நிரந்தர பொதுச் செயலாளர் என போட்டு இருக்கிறார்கள். நான் சாதாரண தளபதியின் ரசிகராகவே இருக்க தான் நான் ஆசைப்படுகிறேன். சட்டமன்றம் ஐந்து வருடத்திற்கு மட்டுமே. தலைவரின் ரசிகன் என்பது எனது கடைசி காலம் வரை இருக்கும். பொதுச் செயலாளர் என்பது முகவரி தான். தளபதிக்கு தொண்டனாக கடைசி காலம் வரை இருக்க விரும்புகிறேன். நம்மைப் பார்த்து அரசியல் தெரியுமா என்கிறார்கள். நம்மை பார்த்து மற்றவர்கள் இனி அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், மாநாடு என்றால் அன்றைய தினம் தான் வா என்று அழைப்பார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு அறிவித்த நாளிலிருந்து தினசரி 2000 பேர் பார்வையிட்டு செல்கிறார்கள் என்றால் தமிழக வெற்றிக்கழகத்தில் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தொண்டரும், ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்கள், நகரம், கிளை என நம்ம வீட்டுவிழா, தளபதி குடும்பவிழா என ஒவ்வொருவரும் தினசரி வந்து பார்க்கின்ற கட்சி தமிழக வெற்றிக்கழகம். அதுதான் தளபதி, அதுதான் தளபதியின் பலம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஒவ்வொருவரும் பத்திரமாக வரவேண்டும் அனைவருக்கும். கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதை முறையாக கடைபிடிக்கவேண்டும் என்றார். மேலும் 56 பேர் அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் மருத்துவர்கள் 150 பேர் மாநாட்டில் இடத்தில் பணியாற்றுவார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் பத்திரமாக, பாதுகாப்பாக வர வேண்டியது மாவட்ட தலைவர்கள் மணித்தலைவர்கள் ஒன்றிய, நகர தலைவர்கள் பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். குறிப்பாக தாய்மார்களை பத்திரமாக இருக்க வேண்டும்; பத்திரமாக அழைத்து வரவேண்டும் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது யாரும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம். 27 ஆம் தேதி காலை வந்தால் மட்டுமே போதும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பம், என் வீடு, என் விழா, என் தளபதியின் விழா என்று கூறி வருவது மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாதிரியான உறவு வேறு யாருக்கும் கிடைக்கப் போவதில்லை, இது தளபதியால் மட்டுமே சாத்தியம் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மாவட்ட தலைவர்கள், ஒன்றியம், நகரம் ஆகிய பொறுப்பாளர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். நங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால்தான் தமிழக வெற்றிக்கழக மாநாடு வெற்றிமாநாடாக அமையும் என்றார். ஏதாவது வேலைகள் இருந்தால் சொல்லுங்கள் நானும் செய்கிறோம் என்று நிர்வாகிகள் ஆர்வத்துடன் என்று கேட்கிறார்கள் ஆனால் எனக்கு அங்கு வேலை இல்லை எனவும் பேசினார்.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தற்காலிக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பயிலரங்கத்தில் இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை மற்றும் கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, சமூக பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டை சிறப்பிப்பது எப்படி, வெற்றி கொள்கை திருவிழா, விளக்க உரை, மாநாட்டு குழுக்களுக்கான கலந்துரையாடல் நடக்க உள்ளது. இந்நிலையில் மநாட்டில் பங்கேற்றவர்களுக்கு உணவு பரிமாறினார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்.