இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளடி பெக்கர்’. சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜென் மார்டின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சுஜிதா சாரங்க் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் கூறும்போது, “நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். தனியாகப் படம் பண்ண முயற்சி செய்தபோது அவரிடம் சில ஐடியாக்கள் கேட்டேன். இந்தக் கதையை கேட்டதும் அவர், நானே தயாரிக்கிறேன் என்றார். பிச்சைக்காரர் ஒருவரின் கதைதான் படம். அவர் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார், பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று கதை செல்லும். படத்தில் டார்க் காமெடி இருக்கும் என்றாலும் இது முழு காமெடி படம் இல்லை. முதலில் வேறு சில நடிகர்களை மனதில் வைத்துதான் கதையை எழுதினேன். எழுதி முடிக்கும்போது, யாருமே யோசிக்க முடியாத ஒரு ஹீரோவை பிச்சைக்காரனாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கவினிடம் பேசினேன். அவர் கதையை கேட்டுவிட்டு நடிப்பதாகச் சொன்னார். படத்தில் கவினுக்கு ஜோடி கிடையாது. அக்ஷயா ஹரிஹரன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பிச்சைக்காரன் தவிர இன்னொரு லுக்கும் கவினுக்கு இருக்கிறது” என்றார்.