கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்க சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்று கேள்வி எழுப்பியது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஈஷா மையம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு தடை விதித்தது. மேலும் போலீசாரை பதில் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, தமிழக போலீசார் நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தந்தை மீதும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல் ஈஷா மையத்தில் பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாகா கமிட்டி செயல்படவில்லை. ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
ஈஷா மையத்தில் அனுமதி இன்றி எக்ஸ்ரே மிஷின் செயல்படுகிறது. அவர்கள் யோகா என்ற பெயரில் ஹிப்னாடிசம் செய்கிறார்கள் என வழக்கறிஞர்கள் கூறினர்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், நிலுவை வழக்குகளை சட்டப்படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது எனகூறினர். 2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என கூறினார்.
இறுதியில், ஈஷா யோகா மைய விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தடையில்லை என்றும் ஆட்கொணர்வு மனுவில் கூடுதல் நடவடிக்கைஎடுக்க தேவையில்லை என்று கூறி மனுவின் விசாரணையை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.