சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024) பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:
ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் அவர்கள்செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கிராமப்புறங்களுக்கு தேவையான சாலை வசதி, மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
அதன்படி, திருமயம் ஊராட்சி ஒன்றியம், கே.பள்ளிவாசல் மற்றும் கீழகுளத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாயம், வணிக நிறுவனங்களுக்கு சரியான அளவுகளில் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், பொன் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 158 மாணவிகளுக்கும், மேலத்தானியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 மாணவர்களுக்கும், 38 மாணவிகளுக்கும், நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 மாணவர்களுக்கும் 26 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 285 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட இந்த விலையில்லா மிதிவண்டியின் மூலம் நாள்தோறும் பள்ளிக்கு உரிய நேரத்திற்குள் சென்று வருவதற்கு உறுதுணையாக இருக்கும்.
எனவே, தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சர் .எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் .அ.அக்பர்அலி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் .அழகு சிதம்பரம், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் தி.சுந்தரி அழகப்பன், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் .ஆ.ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்அ.முத்து, பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சாலை செந்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.