ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மநீம ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் கமலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மநீம இணையதளத்தில், காங்கிரஸ் கட்சியுடன் மநீம இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. காந்தி நினைவு தினமான 30ம் தேதி டில்லியில் இணைப்பு விழா நடைபெறும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மநீம இணையதளத்தில் மர்ம நபர்கள் ஹேக் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இந்த தகவலை பரப்பியது தெரியவந்தது. உடனடியாக இணையதளத்தை மநீம நிர்வாகிகள் மீட்டு அதில் உள்ள பதிவுகளை அகற்றினர்.
மநீம இணையதளத்தை மர்மநபர்கள் ஹேக் செய்து தவறான தகவல்களை பரப்பி உள்ளனர். மநீம இணைப்பு ஒருபோதும் நடக்காது என்று மநீம நிர்வாகிகள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக மநீம வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:
மநீம அதிகாரப்பூர்வ இணையதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.