திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி பொறியாளர் முகேஷ்குமார், பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர்கள் தோளில் போடும் துணிப்பையில் தங்கள் திருமண பத்திரிகையை அச்சிட்டு அதை தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து திருமணத்திற்கு அழைத்து உள்ளனர்.
வழக்கமாக காகிதத்தில், பிளாஸ்டிக்கில் பத்திரிகை அச்சிடுவார்கள். ஆனால் இவர் வித்தியாசமாக துணிப்பையில் பத்திரிகை அச்சிட்டு
வழங்கி இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளது. வழக்கமாக யாரும் இன்னொரு பத்திரிகை தாங்க என கேட்க மாட்டாங்க.
ஆனால் முகேஷ்குமார் பத்திரிகையை பார்த்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இன்னொரு பத்திரிகை கேட்டு வாங்கி உள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி நூதன முறையில் இந்த பத்திரிகையை அச்சிட்டதாக திருமண வீட்டார் தெரிவித்தனர்.
அடுத்த தலைமுறைகாக பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவோம் , இயற்கை வளத்தை காப்போம் என திருமண அழைப்பிதழ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் உள்ளனர்.
பல ரூபாய் செலவு செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வீடு தோறும் கொடுத்தால் திருமண நாள் அன்று குப்பைத்தொட்டியில் தான் இருக்கும், ஆனால் இதுபோல துணிப்பை கொடுத்தால் பல வருடங்கள் எல்லோருடைய வீட்டிலும் நினைவாகயும், பயனாகவும் இருக்கும்.
இந்த மணமக்களை வாழ்த்துவதோடு, நூதன முறையில் துணிப்பையில் திருமண அழைப்பிதழ் அச்சுட்டு வழங்கிய குடும்பத்தாரையும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கே. சி நீலமேகம் பாராட்டி உள்ளார்.