மும்பை அந்தேரியில் கடந்த 12ம் தேதி இரவு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவிருப்பதாக கடந்த 2018-ல் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்தார். சல்மானை கொலைசெய்யும் லாரன்ஸ் கும்பலின்முயற்சி 2 முறை முறியடிக்கப்பட் டுள்ளது. மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான்கான் வசிக்கும்அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் ஏற்கெனவே மத்திய அரசு சார்பில் ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் உள்ளார்.
பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர்கள் விலங்குகளையும், மரங்களையும் வணங்குபவர்கள். குறிப்பாக சிங்காரா மான்களுக்கு பிஷ்னோய்கள் சமூகத்தினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்நிலையில் சிங்காரா மான் வேட்டைப் புகாரில் சல்மான் கான் சிக்கியதால் அவரை லாரன்ஸ் குறி வைத்துள்ளார். கடந்த 1998-ல் ராஜஸ்தானின் ஜோத்பூர் காடுகளில் சல்மான் கான் சிங்காரா மான்களை வேட்டையாடிய புகாரில் சிக்கினார்.
இதன் ஒரு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு ஜோத்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். பிறகு இரு வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இதன் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகளை ராஜஸ்தான் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து வருகிறது. சல்மான் மீது மான் வேட்டை புகார் எழுந்தபோது லாரன்ஸுக்கு ஐந்து வயதுதான்.