Skip to content
Home » சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு…..

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.9-ம் தேதி முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் குழுவினர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின், நேற்று அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும்தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத் தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… தொழில் அமைதி மற்றும் பொது அமைதிகாக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்துக்கு எதிராகஎவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த அறிவுரைகளை இரு தரப்பிலும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தொழிற்சங்க பதிவைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட தயார் என ஏற்கெனவே சொல்லிவிட்டோம். தற்போதைய பேச்சுவார்த்தையில் பிரச்சினை, முறிவு, குழப்பம் என எதுவும் இல்லை.

பேச்சுவார்த்தை தொடக்கத்தில் இருந்து சுமுகமாக, நல்லபடியாக நடைபெற்றது. எங்களது பேரவை கூட்டம் அக்.16-ம் தேதி(இன்று) நடைபெறுகிறது. அதன் பிறகு நல்ல முடிவு எட்டப்படும். கூட்டத்தில் பணிக்கு திரும்புவது என முடிவு எடுத்துவிட்டால், அடுத்த நாளே அனைவரும் பணிக்கு திரும்பிவிடுவார்கள். அரசின் முயற்சிக்கு பாராட்டுகள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!