Skip to content

முழுவீச்சில் மீட்புப் பணிகள்..! 2 நாளில் 7.18 லட்சம் பேருக்கு உணவு… சென்னை மாநகராட்சி..

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியிருக்கிறது. ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர்  உள்ளிட்ட  இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க  வைக்கப்பட்டனர்.  மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொட்டும் மழையை பொருட்படுத்தாது, இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.

Image

அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்துள்ளதாகவும்,  மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழந்த நிலையில் அவை அனைத்தும்  முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளதாகவும்,  சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5,657 பேர் பயனடைந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.  மேலும், கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!