சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. ஆரம்பமே தீவிரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை இரவு தொடங்கி நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னையில் யானைக்கவுனி, பட்டாளம், பெரம்பூர் , புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.