சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். சென்னை புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களைப் பாராட்டினார்.
அவர்களை அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த செயலை முன்களப் பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டினார்கள். முதலமைச்சர் அவர்களே, தங்களை அழைத்துச்சென்று தேநீர் வாங்கித்தந்து உதவி உற்சாகப்படுத்தியது அவர்களின் பெருந்தன்மையையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியது.
முதலமைச்சர் அளித்துள்ள ஊக்கம் மேலும் தங்களை பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு; கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.