சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பில், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வெறுப்பு அரசியலைக் கண்டித்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் இணைந்து நடத்திய கண்டனக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நீங்கள் கேட்கலாம் எதற்காகத் தேர்தலில் முடிந்த பிறகு இந்த நேரத்தில் பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணியின் சார்பாகத் தலைவர்கள் எல்லாம் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று? ஒன்றே ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்பது ஒவ்வொரு நாளும் வெறுப்பு அரசியலின் விதைகளை விதைத்துக் கொண்டிருக்க கூடிய ஒரு இயக்கம்.
அவர்களுக்கு எதிராக கரம் கோர்த்துக் கொண்டுள்ள நாம் ஒவ்வொரு நாளும் அந்த விதைகளை வேரோடு அறுத்துக் கொண்டிருந்தால் தான் நம் நாட்டை காப்பாற்ற முடியும். அந்தப் பணியைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டும். வெறுப்பு அரசியலைத் தொடர்ந்து பாஜக முன்வைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த மேடையில் இருக்கக்கூடிய அத்தனை இயக்கங்களும், தலைவர்களும் மனித நேயத்தை முன்வைக்கக்கூடிய அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள். பாஜக அரசியலுக்காக எதை வேண்டுமென்றாலும் கையில் எடுப்பார்கள், அவர்களுக்குத் தெரிந்தது மத அரசியல், வெறுப்பு அரசியல்.
திராவிட இயக்கம் எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடிய இயக்கம். மேடையில் இருக்கக்கூடிய பல தலைவர்களுக்கு மத நம்பிக்கை இல்லை, கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், சமூக நீதியை மனதில் தாங்கிக் கொண்டு போராடக் கூடிய தலைவர்களாக,
தந்தை பெரியாரின் மனிதநேயத்தைப் புரிந்து கொண்ட மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள். அரசியல் ஆதாயத்தை மட்டுமே சுற்றி பாஜகவின் அரசியல் அமைந்திருக்கிறது என்பதே உண்மை.
மாட்டுக்கறியை மையப்படுத்தி எத்தனை நாடகங்களை நிகழ்த்தி இருக்கிறீர்கள். இதன் மூலம் எத்தனை கலவரங்கள், எத்தனை நபர்கள் உயிர் இறந்து இருக்கிறார்கள். Mob lynching (கும்பலாக அடித்தல்) ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு எத்தனை உயிரைப் பழிவாங்கியிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அது தவறு என்று நீங்கள் நினைத்திருந்தால்? இந்தியாவிலேயே அதிக அளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படும் முதல் இரண்டு மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலம். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேள்வி கேட்கும் தகுதி உங்களுக்கு இல்லை
நாட்டில் பெரும்பான்மை இந்துக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா, அவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா இல்லை. நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்களை ஏமாற்றுவதற்கு எடுக்கும் ஆயுதம் தான் மதம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள பாடங்களில் மகாத்மா காந்தி விபத்தில் இறந்து விட்டதாகப் பாடம் இருக்கிறது. இவர்கள் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்குக் கல்விக் கொள்கையைச் சொல்லித் தருகிறேன் என்று வருகிறார்கள். மூன்று மொழிக் கொள்கை படித்தால் தான் காசு என்று சொல்கிறார்கள். கல்வியில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய மாநிலம் தமிழ்நாடு, எங்களிடம் வந்து கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கை ஏற்கனவே எட்டி நிற்கிறது தமிழ்நாடு.
பாஜக வெறுப்பு அரசியலை வைத்து மக்களைப் பிரித்து ஆளக்கூடிய அரசியல் செய்கிறீர்கள். எதிர் காலத்தைப் பற்றி கவலை இல்லை, அவர்களுக்கு இன்று ஆட்சியில் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையில் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் வெறுத்துக் கொண்டே இருந்தால் இந்த நாடு என்பது நாடாக இருக்குமா? அதைப் பற்றிய கவலைகள் அவர்களுக்கு இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற மேலே உள்ள தலைவர்களுக்கு அக்கறை இருப்பதால் தான் தொடர்ந்து பாஜக – ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்த்து வருகிறோம்.
அரசியலுக்காக இவர்கள் விதைத்துக் கொண்டிருக்கும் வெறுப்பை எதிர்த்து ஒரு அரசியலை ராகுல் காந்தி அவர்கள் உருவாக்குகிறார். அது “அன்பின் அரசியல்”. அன்பின் அரசியலுக்கு முன்னால் அவர்களால் பதில் சொல்லத் தெரியவில்லை. இதுதான் ராகுல் காந்தி மீது அவர்களுக்கு இருக்கக்கூடிய வெறுப்பு அரசியல்.
ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் கோவைக்கு வந்தபோது, வண்டியை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிப்பு பெட்டகத்தை வாங்கிக் கொண்டு போய் மேடையில் நான் அண்ணன் என்று அழைக்கக்கூடிய ஒரே அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அன்போடு அழைத்தார்.
அந்த அன்பு அதோடு நிற்கவில்லை, முதலமைச்சர் அவர்கள் 40க்கு 40 வெற்றி பெற்ற பிறகு கோவைக்கு நன்றி கூட்டத்துக்குச் சென்றார். மோடியின் வெறுப்பு அரசியலுக்கு முன் அன்பின் அரசியலை முன்வைத்து, ஒரே ஒரு இனிப்பு பெட்டகத்தைக் கொடுத்து தமிழ்நாட்டில் வெற்றியைப் பெற்றுள்ளார் என பேசினார்.
இந்தியா கூட்டணி என்ற பெயரை வைத்ததால். இனிமேல் இந்தியா என்ற வார்த்தை கூடச் சொல்ல மாட்டேன் என்று வெளிநாடுகளில் போய் பாரத் என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு பாரத் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பாரத் என்றால் நமக்குத் தெரியும். நம்மைப் பார்த்த மிரண்டு போயிருக்கக் கூடியவர்களை, வாஞ்சையோடு அவர்களோடு இணைந்து அரசியலை முன்னெடுக்க நினைப்பவர் ராகுல் காந்தி .
முன்னாள் அமைச்சர் அனுராக்கை பொறுத்தவரை சாதி என்பது தெரியாமல் இருந்தால் அது இழுக்கு. ஆனால் ராகுல்காந்தி அதற்குப் பதில் சொல்கிறார் ஜாதி என்பது எனக்கு இல்லை. இதுதான் நம்மை இணைத்து வைத்திருக்க கூடிய கயிறு. இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தைக் கையில் வைத்து பதவி ஏற்க வேண்டிய சூழலை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. நாட்டை ஆளக்கூடியவர்களிடம் இருந்து அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
”தமிழர்களை நீங்கள் ஒருபோதும் ஆளமுடியாது’ என்று ஒரு முறை பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சொன்னார். ஒரு மனிதனுக்கு பயம் இல்லை என்றால் அது ராகுல் காந்தி என்று நினைக்கிறேன்.
அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்த நாட்டிற்காக உயிர் இழந்து இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். மனிதர்கள் நேசிக்க கூடிய தலைவன் தான் ராகுல் காந்தி.
மிரட்டல், உருட்டல் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும், கலைஞர் வழியில் வந்த முதலமைச்சர் அவர்களுக்கும், திமுகவிற்கும், இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் வேலைக்கு ஆகாது.
நாங்கள் எத்தனையோ சவால்களை, சோதனைகளை, வலிகளை, அடிகளைத் தாங்கி இந்த நாட்டில் நங்கூரமாக நிற்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, நாட்டை உங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த மேடையில் கரம் கோர்த்துக் கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் எனச் சொல்லி வருகிறார்கள். விரைவில் பாஜக ஆர்எஸ்எஸ் இல்லாத பாரத் என்ற நிலை உருவாகும் எனப் பேசினார்.