சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது… கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இன்று காலை தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தொடர்ந்து அந்த பகுதியில் நீடிக்கிறது. இது தொடரந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலில் நிலை கொள்ளும். அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நேற்று வலுப்பெற்று ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால், 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை (அக்.,15) டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
16ம் தேதி வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
17 ம் தேதி வட மேற்கு மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.