தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா – உணவுத் திருவிழா, தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் அக்டோபர் 11ம் தேதி கோலாகலமாகத் துவங்கியது.
தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024 நிறைவு நாளான இன்று (13/10/2024) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, விழா சிறப்பாக நடக்க உழைத்த அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ச் சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
புகைப்பட கண்காட்சியில், 1,500 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வெற்றி பெற்ற ரூபன் ராஜ், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வெற்றி பெற்ற வே.சரவணகுமார் (அ) ஜியோ ஷரவண், 8 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரத்தைக் கனிமொழி எம்.பி வழங்கினார். மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 8 நபர்களுக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
நிறைவு விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது: இந்த புத்தகக் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், நமது மாவட்டத்திற்குப் புதிதாக ஒரு மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்று தெரிவித்தார்கள். அந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் என்று சொன்ன பொழுது இனிமேல் புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இந்த அளவிற்குப் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடியவர். தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியை இவ்வளவு சிறப்பாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து கலந்து கொள்ளக்கூடிய வகையில் நடைபெறக் காரணமானவர்.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான புத்தகத் திருவிழா, நெய்தல் கலை விழா, உணவுத் திருவிழா என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகக் கொண்டு வந்து வெற்றியோடு நடத்த வேண்டும் என்றால், அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றினால்தான் சாத்தியமாகும். இந்த நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெய்தல் கலை திருவிழாவின் கடைசி நாளான இன்று தூத்துக்குடி இசைப் பள்ளி கலை நிகழ்ச்சி, சஹா கலைக்குழு, உவரி கழியல் குழு, ஜெட் கிங் களரி குழு, ஜிக்காட்டம் கலைக்குழு, பாப்பம்பட்டி பெரிய மேளம், கார்த்திக் தேவராஜ் ஆர்கெஸ்ட்ரா ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பங்களுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, நபார்டு மண்டல மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், கிரீன் ஸ்டார் நிறுவன இயக்குநர் செந்தில் நாயகம், EFI அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை திறமைகளை வெளிப்படுத்தினர். நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளின் தனித்துவமான உணவுகள் எனப் பலவகையான உணவுகளை மக்கள் உண்டு மகிழும் வகையில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.