சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பூவிருந்தவல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் உணவு தயாரிப்பதற்காக எரிவாயுவை ஆன் செய்த போது அதிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து வீட்டிலிருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறிய நிலையில் எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய பிரஜன், குமார், சரஸ்வதி ஆகியோர் என்னவென்று பார்த்து கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்தது.
மேலும் அந்த சிலிண்டர்களில் ஏற்கனவே கசிவு ஏற்பட்ட நிலையில் அதனை கவனிக்காமல் இருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பூவிருந்தவல்லி போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த பகுதியில் வீட்டிலிருந்த ஒரு பகுதி இடித்து விழுந்தது. சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி சிசிடிவியில் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.