Skip to content
Home » மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்,35,. இவர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆகஸ்ட்.12ம் தேதி மாணவிகளின் பெற்றோர் சிலர் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினருக்கு புகார் அளித்தனர். அதில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு வகுப்புகளில் படிக்கும் மாணவிகளிடம், முத்துக்குமரன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மறுநாள் 13ம் தேதி, சைல்ட் ஹெல்ப் லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகிய இருவரும் பாப்பநாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியோடு ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம், பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் ஆசிரியர் முத்துக்குமரன் தொடர்பாக 43 மாணவிகளிடம், துண்டு சீட்டில் எழுதி தர கூறியுள்ளனர். அதில் மாணவிகள் பலரும் ஆசிரியர் முத்துகுமரன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக எழுதி கொடுத்ததை கண்டு சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், தங்களின் விசாரணை அறிக்கையை முதன்மைக்கல்வி அலுவலரிடம் அளித்தனர். இதையடுத்து கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆகஸ்ட்.14ம்தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில், கல்வித்துறை தரப்பில் எவ்வித புகாரும் கொடுக்காமல் இரண்டு மாதம் இருந்து வந்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் சிலர் மீண்டும் சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினரை தொடர்புக்கொண்டு கேட்ட போது, முத்துக்குமரன் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கிடையில் சைல்டு ஹெல்ப்லைனை சேர்ந்த செண்பகமலர் என்பவர் கணித ஆசிரியர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். விசாரணையில், முத்துக்குமரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *