தஞ்சை தில்லைநகரை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆட்டோமொபைஸ் நிறுவனத்தில் ஒரு காரை 2017-ம் ஆண்டு முன்பணம் செலுத்தி மீதி தொகையை நிதி நிறுவனம் உதவியுடன் 2018-ம் ஆண்டு செலுத்தி விலைக்கு வாங்கினார். கார் வாங்கிய போது காப்பீடுசெய்த நகலையும் வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் 19-ம் ஆண்டு கார் வீட்டின் சுவரில் மோதியதில் கதவு சேதம் அடைந்தது. இதையடுத்து அதனை சரி செய்த போது, காப்பீடு கலாவதியாகி விட்டது என சக்திவேலிடம் சர்வீஸ் சென்டரை சேர்ந்தவர்கள் கூறியதுடன், செலவுத்தொகை ரூ.9ஆயிரத்து 71 பெற்றுக்கொண்டுள்ளனர்.
காப்பீட்டுக்காலம் அமலில் இருக்கும் போது காலாவதியாகி விட்டது என கூறி பணத்தை பெற்றுக்கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளான சக்திவேல் நஷ்ட ஈடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட நுகர்வேர் குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது காருக்கு செய்யப்பட்ட இன்சூரன்சில் முறைகேடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
வழக்கை நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் விசாரித்து சர்வீஸ் சென்டர் மேலாளர் வசூலித்த ரூ.9 ஆயிரத்து 71 மற்றும், கார் நிறுவன உரிமையாளர், முதன்மை மேலாளர், சர்வீஸ் சென்டர் மேலாளர், இன்சூரன்சு கிளை மேலாளர் ஆகியோரின் சேவை குறைபாடு தொடர்பாக சக்திவேலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாகவும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மொத்தம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 71-ஐ 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.