தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் –4’ பணியில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 20.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கான எழுத்து தேர்வு, கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது. இத்தேர்வை 15.88 லட்சம் பேர் எழுதினர். அதிகம் பேர் தேர்வு எழுதியுள்ளதால், 480 இடங்களை கடந்த செம்படம்பரில் அதிகமாக்கிய டி.என்.பி.எஸ்.சி., தற்போது மேலும் 2,208 இடங்கள் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, குரூப் – 4 பணியிடங்களுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை, 8,932 ஆக உயர்ந்துள்ளது. தேர்வு எழுதியவர்களுடன், இந்த காலி இடங்களை ஒப்பிடும்போது, ஒரு பணியிடத்துக்கு, 177 பேர் போட்டியிட உள்ளனர்.