Skip to content
Home » இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்

இந்திய தொழில் துறையின் பிதாமகன்…..ரத்தன் டாடா காலமானார்

  • by Senthil

டாடா குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்புகாரணமாக அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று நள்ளிரவு  அவர் காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நவீன இந்தியாவின் பிதாமகன், தொழில் துறையில் இந்தியாவை முன்னுக்கு கொண்டு வந்த  தொழில் துறை  வித்தகவர் இவர்.நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28-ல்  குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிறந்தவர்

டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.

இந்தியக் குடும்பங்கள் சாலையில் ஸ்கூட்டர்களில் பயணிப்பதை நான் பார்த்துள்ளேன். அந்த பயணத்தின் போது தாய் மற்றும் தந்தைக்கு மத்தியில் சாண்ட்விட்ச் போல குழந்தைகள் அடைப்பட்டு இருப்பார்கள். அவர்களது பாதுகாப்பான பயணத்துக்காக என்ன செய்யலாம் என யோசித்து போது உதயமான ஐடியா தான் ‘நானோ’ கார்.

நான் ஆர்க்கிடெக்ட் படித்ததன் பலனாக டூடுல் வரைவேன். ஓய்வு நேரத்தில் அதை வரைவது வழக்கம். இருசக்கர வாகனங்களை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். அப்படி நான் வரைந்த டூடுல் நான்கு சக்கரங்களை கொண்டிருந்தது. அப்போது முடிவு செய்தேன் அந்த பாதுகாப்பான வாகனம் கார்தான் என்று. நானோ, நம் மக்கள் அனைவருக்குமான கார் என்று கடந்த 2022-ல் பகிர்ந்த சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சமுக வலைதளத்தில் நெட்டிசன்கள் குரல் கொடுத்த போது அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். விருதுகளை காட்டிலும் இந்தியனாக இருப்பதே தனது அதிர்ஷ்டம் என அப்போது சொல்லி இருந்தார்.

 வாயில்லா ஜீவன்கள் மீது அக்கறை கொண்டவர் ரத்தன் டாடா. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ‘பருவமழை காலத்தில் சாலையில் நாம் பார்க் செய்யும் கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் அதன் கீழே ஏதேனும் விலங்குகள் உள்ளனவா என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலம் வீடற்ற வாயில்லா ஜீவன்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்’ என சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோ காலத்தில்  ரூ.1500 கோடி நன்கொடை வழங்கியவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!