தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
அப்படி வருகை தருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, பக்தர்கள் இறை தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் நிற்காமல் விரைவாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் இத்திருக்கோயில் வளாகத்தில் ரூ. 48,36 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி உள்ளிட்ட 4 புதிய திட்டப் பணிகளுக்கு வருகின்ற 14ம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது 540 நபர்கள் தங்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திருக்கோயிலில் முதல் கட்டமாக நடைபெற்று வரும் 21 பணிகளையும், இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் 24 பணிகளையும் இன்று ஆய்வு செய்தோம். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட திட்டமிட்டு இருக்கின்றோம். ஆகவே இப்பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் மாதத்திற்கு ஒரு முறை துறையின் அமைச்சர் என்ற வகையில் நானும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களும், மதிப்பிற்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் அவ்வபோது ஆய்வு செய்திட உள்ளோம்.
. திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர், திருத்தணி, வயலூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள முருகன் திருக்கோயில்கள் பெருந்திட்ட வரைவில் (மாஸ்டர் பிளான்) எடுத்துக்கொள்ளப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்துமே அடுத்த ஆண்டு டிசம்பர் அல்லது அதன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
கந்த சஷ்டி துவங்குவதற்கு முன்பாக யாத்திரி நிவாஸ் என்று அழைக்கப்பட்டட பக்தர்கள் தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம். முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளிலிருந்து இதற்கான முன்பதிவு தொடங்கப்படும். இதனை நிர்வகிக்கும் பணிகளை திருக்கோயில் நிர்வாகம் அல்லது சுற்றுலாத்துறையின் மூலமாக மேற்கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். திருச்செந்தூர் கடற்கரையில் கற்கள் கொட்டப்படுகின்ற பணி பக்தர்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்ற பணியாகும். இதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து தான் இந்த முடிவினை எடுத்து இருக்கின்றோம்.
கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்காரம் குறித்து அனைத்து அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் 10 நாட்களுக்குள் நடத்த இருக்கின்றோம். திருச்செந்தூர் திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பக்தர்களுக்கு சிறு சிறு சிரமங்கள் சங்கடங்கள் இருந்தாலும் கூட அதைப் பொறுத்தது கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தந்து இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகின்ற ஒரு திருக்கோயிலாக இந்த திருக்கோயில் திராவிட மாடலாட்சியில் அமையும் என்று தெரிவித்தார்.