ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே
ஒதுக்கப்பட்டது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளாராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிருகிறார். இதற்கிடையே அதிமுகவின் இரண்டு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஆனால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதன்படி, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு (98) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.