Skip to content
Home » ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Senthil

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருவரிடமும் ATM-ல் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறி ATM கார்டை பெற்று ATM-ல் பணம் இல்லை எனக் கூறி அவர்களிடம் அந்த மர்ம நபர் வேறோரு போலியான ATM கார்டுகளை கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தாள் மற்றும் சஞ்சீவி ஆகியோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுப்படி, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படை குழுவினர் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றச் செயலில் ஈடுபட்டது கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கீழ் நங்கவரம், மேலத்தெருவை சேர்ந்த சரவணக்குமார் (30) என தெரியவந்தது.

இதையடுத்து சரவணக்குமாரை இன்று கரூர் நகரப் பேருந்து நிலையம் அருகில் வைத்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து போலியான ATM கார்டுகள், பணம் மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணயிைல் இவர் மீது புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், திருச்சி, மணப்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, திருமங்கலம், ஒட்டமாந்துறை, நாமக்கல் போன்ற பகுதிகளில் இதே குற்றங்களை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்க பணம் எடுக்க ATM-களுக்கு செல்லும் போது, முன் பின் அடையாளம் தெரியாத நபர்களிடம் ATM கார்டுகளை கொடுக்க வேண்டாமெனவும், பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படியும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!