தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று கோவை சிவானந்தா காலனியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஸ்தாபன தினமான விஜயதசமியன்று நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி
மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
சிவானந்தா காலணியில் நடைபெற்ற ஊர்வலமானது, சிவானந்தா காலனி பகுதியில் துவங்கி, முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அணிவகுப்பு ஊர்வலத்தினை தொடர்ந்து பொது நிகழ்ச்சி நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.