Skip to content

கூலிதொழிலாளி தற்கொலை…வங்கி மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் முனுசாமி (45). கூலி தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். முனுசாமி தனது குடும்ப தேவைக்காக இரண்டு தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் (மயிலாடுதுறை ஐடிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி, ஶ்ரீராம் பைனான்ஸ்) 4 லட்சத்திற்கு மேல் தனிநபர் கடன், குழுகடன் பெற்று மாதத்தவணை செலுத்தி வந்துள்ளார். சமீபத்தில் விபத்தில் முனுசாமி காயமடைந்ததால் வங்கி கடனுக்கான மாத தவணைகளை செலுத்த முடியவில்லை. இதனை அடுத்து வங்கி மற்றும் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் முனுசாமியின் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கடன் தவணையை கட்ட முடியவில்லை என்றால் செத்துப்போ இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்கிறோம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி வங்கி ஊழியர்கள் பைனான்ஸ் நிறுவனத்தினர் திட்டியதாகவும், விட்டு குடும்ப பெண்களை திட்டியதாகவும் தற்கொலை செய்து கொள்வதாக செல்போனில் வீடியோ எடுத்தபின் கடந்த மாதம் 26-ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2ஆம்தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சேத்திரபாலபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை-கும்பகோணம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, குத்தாலம் தாசில்தார் சத்தியபாமா, குத்தாலம் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முனுசாமியின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டுதல் 108 BNS பிரிவில் வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார் ஶ்ரீராம் பைனான்ஸ் மேலாளர் சுபாஷ்(28), ஹெச்டிஎப்சி வங்கி மேலாளர் பிரபாகரன்(34), ஐடிஎப்சியை சேர்ந்த துணைமேலாளர் அஜித்குமார்(28), மற்றும் நல்லுறவு மேலாளர் கீர்த்திவாசன்(21) ஆகிய நான்கு பேரை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!