”மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடலூர் வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். அப்போது சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும் வடலூரில் அமைச்சர் சேகர்பாபு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் முதல்வர் மு .க .ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, தனிப்பெருங்கருணை நாள் எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
“உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!”
“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்!
உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்!
வாழ்க வள்ளலார்!”இவ்வாறு தெரிவித்தார்.