கரூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில் 127 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10ம் வகுப்பு படித்து, குறு அங்கன்வாடியில் 10 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது அரசாணையில் உள்ளது.
ஆனால், அந்த 2 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தாததால் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் குறு அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த மாதம் 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கரூர் மாவட்டத்திலும் காத்திருப்பில் உள்ள 120 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைந்துள்ள திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 60 பேர் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கன்வாடி பெண் பணியாளர்களின் போராட்ட இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடுவது இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.