இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் இஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய தளபதிகளை குண்டு வீசி கொலை செய்தது. நஸ்ரல்லா கொலைக்கு பதிலடி தரும் வகையில் திங்கள் இரவு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தடை விதித்தது. இதையடுத்து இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில், தாக்குதலை தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு புதிய மிரட்டல்களை ஈரான் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு பெயர்களை வெளியிட்டுள்ளது ஈரான் உளவுத்துறை அமைச்சகம். பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது.