கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங் கோவில் மேற்கு, ஆத்தூர் பூலாம்பாளையம், காதப்பாறை உள்ளிட்ட ஊராட்சிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற தீர்மானத்தையும், சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கியதோடு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வருகின்ற 14ம் தேதி வேலுச்சாமி புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.