Skip to content
Home » அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உத்தமர் காந்தியடிகள்  பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
அரியலூர் மாவட்டத்திற்கு கதர் விற்பனை நடப்பாண்டிற்கு ரூ.30 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள். கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புதிய வடிவமைப்பில் உள்ளது. மேலும், முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், மெத்தை விரிப்புகள் கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது. அனைத்து கதர், பாலியஸ்டர், பட்டு இரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் இரகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நாம் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் மதிப்புள்ள கதர் மற்றும் கிராமப்பொருள் உற்பத்தி பொருள்கள், நமது கிராமங்களில் வாழும் லட்சக் கணக்கான ஏழை, எளிய  நெசவாளர் குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, வறுமையினை போக்கிட உதவும். எனவே, அண்ணல் காந்தியடிகளின் கனவினை நனவாக்கிட அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த அனைத்து ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் கதர், பட்டு, பாலிஸ்டர், உல்லன் ரகங்கள் மற்றும் கிராமப் பொருட்களை கொள்முதல் செய்து பயனடைவதுடன், இம்மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட      விற்பனை குறியீட்டினை எய்திட ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளி பிரபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) சீ.ஸ்ரீராம், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையாராஜா, காதி கிராப்ட் மேலாளர் பூதபாண்டியன், உதவி மேலாளர் கந்தசாமி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!