ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அப்படி செய்யமுடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையான மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்தால் மற்ற எல்லா மாதங்களிலும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பதால் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்ய மக்கள் நீர் நிலைகளில் கூடுவார்கள்.
அதிலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் தர்ப்பணம் செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இங்கு மக்கள் வருவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4மணி முதல் இங்கு மக்கள் வரத்தொடங்கினர். இதற்காக அங்கு மின்னொளி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
தர்ப்பணம் செய்வதற்காக புரோகிதர்கள், வெளியூர்களில் இருந்தும் வந்திருந்தனர். ஆனாலும் புரோகிதர் கிடைக்காமல், இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இதற்காக 10 பேர், 20 பேர் என வரிசையாக உட்காரவைத்து அனைவருக்கும் ஒரே நேரத்தில் மந்திரங்கள் சொல்லி புரோகிதம் செய்யப்பட்டது.
புரோகிதத்திற்காக மக்கள் வாழை இலையில் பச்சரிசி, பழங்கள், கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய்,அகத்தி கீரை ஆகியவற்றுடன் தட்சணையும் வைப்பார்கள். மந்திரங்கள் முடிந்ததும் பிண்டங்களை ஆற்றில் விட்டு விட்டு நீராடிவிட்டு கரையேறிய பக்தர்களிடம் அகத்திகீரை, பழம், தேங்காய்களை கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள கோவில்களில் சென்று சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.
அம்மா மண்டபம் வந்த மக்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவில் என பல கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.
இன்று அதிகாலை முதல் அம்மா மண்டபத்தில்5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். தொடர்ந்து மக்கள் வந்து கொண்டும், சடங்குகள் முடிந்து திரும்பிய வண்ணமும் இருந்தனர். போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.