இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை காரணமாக 2, 3-வது நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 4-வது நாளான நேற்று ஆட்டத்தை மோமினுல் ஹக், முஷ்ஃபிகா் ரஹிம் தொடா்ந்தனா். ரஹிம் 2 பவுண்டரிகளுடன் 11, தொடா்ந்து வந்த லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகளுடன் 13, ஷகிப் அல் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
ஆரம்பம் முதல் அதிரடி
இதையடுத்து, இன்னிங்ஸை தொடங்கிய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினாா். வேகப்பந்துவீச்சு எடுபடாத நிலையில், சுழற்பந்துவீச்சாளரான மெஹிதி ஹசன் மிராஸை களமிறக்கினாா் வங்கதேச கேப்டன் ஷான்டோ.
அதற்கான பலனாக, மிராஸ் வீசிய 4-வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தாா். அவா் 11 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் அடித்திருந்தாா். தொடா்ந்து வந்த ஷுப்மன் கில்லும் அதே அதிரடியை தொடா்ந்தாா். 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்த நிலையில், ஜெய்ஸ்வால் – கில் ஜோடி பிரிந்தது.
வங்கதேச பௌலிங்கை பதம் பாா்த்துவந்த ஜெய்ஸ்வால், 51 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 72 ரன்களுக்கு போல்டானாா். 4-வதாக ரிஷப் பந்த் களத்துக்கு வர, கில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பந்த் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி – கே.எல்.ராகுல் கூட்டணி, அடுத்த அதிரடியை தொடா்ந்தது. இவா்கள் பாா்ட்னா்ஷிப், 87 ரன்களை எட்டியபோது, அரைசதத்தை நெருங்கிய கோலி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
ராகுல் அரைசதம் கடக்க, ஜடேஜா 8, அஸ்வின் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா். ராகுல் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆகாஷ் தீப் 2 சிக்ஸா்கள் விளாசி வீழ்ந்தாா். இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளோ் செய்வதாக ரோஹித் சா்மா அறிவித்தாா். பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
வங்கதேச பௌலா்களில் மெஹிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோா் தலா 4, ஹசன் மஹ்முத் 1 விக்கெட் கைப்பற்றினா்.
தடுமாற்றம்
பின்னா் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்களே எடுத்துள்ளது. ஜாகிா் ஹசன் 10, ஹசன் மஹ்முத் 4 ரன்களுக்கு அஸ்வினால் வீழ்த்தப்பட, ஷத்மன் இஸ்லாம் 7, மோமினுல் ஹக் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
அதிவேக 50, 100, 200
முதல் இன்னிங்ஸில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆடவா் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 200 ரன்களை கடந்த அணியாக புதிய உலக சாதனை படைத்தது.
50 ரன்களில் இதற்கு முன், இங்கிலாந்து அணி நடப்பாண்டு ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 4.2 ஓவா்களில் 50 ரன்கள் அடித்ததே அதிவேகமாக இருந்த நிலையில், இந்தியா தற்போது 3 ஓவா்களில் அந்த இலக்கை அடைந்தது.
அடுத்து சதத்தில், தனது சாதனையை தானே முறியடித்துள்ளது இந்தியா. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா 12.2 ஓவா்களில் 100 ரன்களை எட்டியதே அதிவேகமாக இருக்க, தற்போது அதை முறியடித்து 10.1 ஓவா்களிலேயே சதம் தொட்டது.
அதிவேக 200 ரன்களில், ஆஸ்திரேலியா கடந்த 2017-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 28.1 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது சாதனையாக இருக்க, இந்தியா அதை முறியடித்து 24.2 ஓவா்களில் அந்த மைல்கல்லை அடைந்தது.
இந்தியா தனது இந்த இன்னிங்ஸில் 28 பவுண்டரிகள், 11 சிக்ஸா்கள் என 158 ரன்களை பவுண்டரி லைனை கடந்து பெற்றுள்ளது.
கோலி ‘27,000’
இந்திய பேட்டா் விராட் கோலி அரை சத வாய்ப்பை இழந்தாலும், சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக 27,000 ரன்களை எட்டிய 4-வது வீரா் ஆனாா். அவா் டெஸ்ட்டில் 8,918, ஒருநாள் கிரிக்கெட்டில் 13,906, டி20-ல் 4,188 ரன்கள் விளாசியுள்ளாா்.
சா்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவா்கள் (27,000-க்கு மேல்) பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கா் (34,357) இருக்க, முறையே அடுத்த இரு இடங்களில் இலங்கையின் குமார சங்ககாரா (28,016), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (27,483) ஆகியோா் உள்ளனா்.
இன்று காலையும் வங்கதேசம் தொடர்ந்து பேட்டிங் செய்தது. 31.1 ஓவரில் வங்கதேசம் 6 விக்கெட் இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆட்டம் நடக்கிறது. வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற வேகத்தில் இந்திய வீரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.