நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கொடியில் இடம் பெற்றுள்ள, தங்கள் கட்சி சின்னமான ‘யானை’ உருவத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கடிதம் அளித்து இருந்தது.
நீலக்கொடியும் யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும். தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், கட்சிக் கொடியை அண்மையில் அறிமுகம் செய்தார். அதில் தேசிய அங்கீகாரம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானை உருவம் இடம்பெற்று இருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை சட்ட விரோதமாக தங்களது கட்சிக் கொடியில் பயன்படுத்தியுள்ள நடிகா் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவெக கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பகுஜன் சமாஜ் கடிதம் எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தத் தடைகோரி பகுஜன் சமாஜ் அளித்த கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. கட்சிக் கொடிகளுக்கு உள்ளே இருக்கும் சின்னங்களுக்குத் தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் வழங்காது. பிற கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.