தமிழக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கோட்டையில் அவசர ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் , மற்றும் அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். சில வருடங்களாக வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில், அல்லது சில மணி நேரங்களில் மொத்தமாக கொட்டுகிறது. இதை எதிர்கொள்வது முக்கியமானது. இந்த நேரத்தில் தான் பெரும் சேதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு கூட சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது-இந்த ஆண்டும் நாம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டும்.
இதற்காக தலைமை செயலாளர் கடந்த 14ம் தேதி 21ம் தேதி கலெக்டர்கள், எஸ்.பிக்கள் கூட்டத்தை கூட்டி அறிவுரை வழங்கி இருக்கிறார். இதற்காக நாம் முன்ெ னச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க நாம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து இருக்கிறோம். அவர்கள் மேற்கண்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து தூர்வாரும் பணி, கழிவு நீர் அகற்றும் பணி, ஆகியவற்றை முடுக்கி விட வேண்டும். அவர்கள் தக்க அறிவுரை வழங்குவார்கள்.மழை வெள்ள காலத்தில் மாணவச்செல்வங்கள் நீர் நிலைகளில் விளையாட செல்லாமல் தக்க அறிவிரை வழங்க வேண்டும்.வௌள சேதம் ஏற்படும் என கருதும் பகுதிகளுக்கு முன்னதாகவே ஜேசிபி, மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முறையாக செயல்பட்டு ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
மழை காலங்களில் தகவல் தொடர்பு, மின்சாரம், பால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மருது்துவ சேவையும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.
இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இதில் தன்னார்வலர்களின் பங்கும் முக்கியமானது. இதற்காக முறையான செயல்திட்டம் உருவாக்க வேண்டும். ஒருமித்த கருத்துடன் நின்று செயல்பட்டால் 100% வெற்றி நிச்சயம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.