திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா , சோனாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி, விவசாயி. இவரது மனைவி இந்துமதி (45). இவர்களுக்கு 2 குழந்தைகள். கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் அதே ஊரைச் சேர்ந்த பைனான்சியர் காந்தி என்பவரிடம் சிவாஜி குடும்பத்தினர் விவசாயம் மற்றும் வீட்டு தேவைக்காக ரூ. 2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர். வட்டியையும், கடனையும் திருப்பி செலுத்தி விட்ட நிலையில், கூடுதலாக வட்டி கொடுக்கவில்லை எனக் கூறி, சிவாஜி குடும்பத்தினரை காந்தி அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார்.
இதனால் இருதரப்புக்கும் முன் விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சிவாஜியின் வீட்டுக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற காந்தி, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் காரை டிராக்டரால் மோதினார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த இந்துமதி, ஏன் டிராக்டரால் கரை மோதுகிறீர்கள் எனக் கேட்டு சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காந்தி, டிராக்டரை திருப்பி, இந்துமதி நின்ற பக்கம் ஓட்டிச் சென்று இந்து மதியை நேருக்கு நேராக மோதி விட்டு, டிராக்டரை ஒட்டிக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த இந்துமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் நீடாமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் இந்துமதியின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் , தப்பி ஓடிய காந்தியை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் நீடாமங்கலம் சோனாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.