அரியலூர் நகரில் நிறைந்த மனம் திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி சந்தித்து வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் தொற்றா நோய்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளுக்கே சென்று, சிகிச்சை .மருந்து .மாத்திரைகள் வழங்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 200 நபர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஒரே வீட்டில் மூன்று பேர் பயனடைந்து வரும் மின் நகர் பகுதியை சேர்ந்த கந்தன் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர்ரத்தினசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயார் குணவதி மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கந்தன் ஆகியோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் குறித்து கந்தன் தெரிவித்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தங்களுக்கு முழுமையான பலன் கிடைத்துள்ளதாகவும், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்குவதாகவும், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் வீட்டிற்கு வந்து வழங்குவதாகவும் தெரிவித்தனர். இத்திட்டம் தங்களுக்கு மனம் நிறைந்துள்ளதாக பயனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆய்வில் மாவட்ட மருத்துவ சுகாதாரத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.