புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே சிவ மடம் உள்ளது. அந்த மடத்தின் காவலாளி இன்று காலை பணிக்கு வந்தபோது காரை பார்த்துள்ளார். காருக்குள் 5 பேர் இறந்து கிடந்தனர். காரை தட்டிப்பார்த்தும் அவர்கள் எழும்பவில்லை.
எனவே காவலாளி நமணசமுத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து காரை திறந்து பார்த்தபோது, காரின் முன் சீட்டில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடந்தனர். பின் சீட்டில் ஒரு மூதாட்டியும், 2 இளைஞர்களும் இறந்து கிடந்தனர்.
காரின் நம்பரைக்கொண்டு காரின் சொந்தக்காரர் யார் என விசாரணையை தொடங்கினர். அதில் காரில் இறந்து கிடந்தவர் மணிகண்டன்(50) அவரது மனைவி நித்யா என்பது தெரியவந்தது. பின் சீட்டில் நித்யாவின் தாயாரும், நித்யாவின் 2 மகன்களும் இறந்து கிடந்து உள்ளனர்.
அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. காரை சோதித்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக எழுதி உள்ளனர். மணிகண்டன் சேலம் ஸ்டேட் பாங்க் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர் கிருஷ்ணகிரியில் காப்பர் பேக்டரி நடத்தி வந்து உள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாம். சடலங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.இந்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.