ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். செங்கோட்டையன் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தல் பணிக்குழுவுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். ஈரோட்டில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், அதிமுக பொறுப்பாளர்கள் அனைவரும் நாளை நண்பகலுக்குள் ஈரோட்டில் இருக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.