இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்த நிலையில் நேற்று இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை அறிவித்தார் திசநாயக்க. நேற்று பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி பதவி ஏற்றுக்கொண்டார்.
திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே உள்ளது. எனவே புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இத்தகைய சூழலில் புதிய ஜனாதிபதி அடுத்து என்ன செய்ய போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த சூழலில், நேற்று நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்தார்.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல்அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி அக்டோபர் 11-ம் தேதி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நவம்பர் 14-ம் தேதி நடத்தப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.ஆனால் திசநாயக்காவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றே தோன்றுகிறது. எனவே அவர் கூட்டணி ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.