திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் பாமக பிரமுகருமான மோகன் ஜி, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், ஆனால் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை என்றும் தனது பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். முன்னதாக, பழநி கோயிலில் பஞ்சாமிர்த தயாரிப்புக்கு அவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை எனவும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் இந்து அறிநிலையத்துறையைச் சேர்ந்த சமயபுரம் கோவிலின் கண்காணிப்பாளர் கவியரசு அளித்த புகாரின் அடிப்படையில்192, 196(1)(பி), 352, 353(1)(பி), 352(2) உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் இன்று காலை மோகன் ஜியை சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். திருச்சி அழைத்து வரப்பட்ட இயக்குனர் மோகன்ஜி திருச்சி 3ம் எண் மாஜிதிரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சொந்த ஜாமீனில் டைரக்டர் மோகன் ஜியை மாஜிஸ்திரேட் பாலாஜி விடுத்து உத்தரவிட்டார்.