மெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் விதத்திலும், கூட்டுப் பாலியல் வன்முறை செய்வது போன்றும் 15 நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கூட்டுப் பாலியல் வன்முறை செய்தவர்களைத் தண்டிக்கும் விதமாக வன்முறையான காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து பார்வையாளர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையத்துக்கு (BCCC) புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சன் டிவிக்கும், திரு பிக்சர்ஸ்க்கும் பி.சி.சி.சி நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது.
அவர்கள் கடந்த மாதம் இதுதொடர்பாக விளக்கமளித்தனர். ஆனால் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பி.சி.சி.சி சன்டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்புவதற்கு முன் கூட்டுப் பாலியல் வன்முறை போன்ற பெண்களைத் துன்புறுத்தும் காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவி வருத்தம் தெரிவிக்கிறது என்று 30 விநாடிகளுக்கு ஒளிபரப்புமாறு பிசிசிசி தனது உத்தரவில் கூறியுள்ளது.