Skip to content
Home » சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

சிறார் ஆபாச படம்……நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர் மீது அம்பத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘‘இரு சிறார்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் 2 வீடியோக்களை மனுதாரர் தனது மொபைல் போனில் பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாச படங்களைப் பார்த்ததை மனுதாரரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து மீள உளவியல் ரீதியிலான சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்பதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்குற்றம் சாட்ட முடியாது.
மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி ஆபாச படங்களை எடுத்து அதை மற்றவர்களுக்கு அனுப்பினாலோ அல்லது வெளியிட்டாலோ குற்றமாகும். மனுதாரர்அதுபோன்ற குற்றச்செயலில் ஈடு படவில்லை என்பதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது,” இவ்வாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது. மேலும் விசாரணையின் போது நீதிபதிகள், தனிநீதிபதி எவ்வாறு இதுபோல உத்தரவிட முடியும் என்றும், இது மிகக்கொடுமையானது என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு , “நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தன் தீர்ப்பு மூலம் மிக மோசமான தவறு செய்திருக்கிறார். குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை ரத்து செய்கிறோம்.

தனிப்பட்ட முறையில் சிறார் ஆபாச படங்களை சேமித்து வைத்து பார்ப்பதும் குற்றமே. தனிப்பட்ட முறையில் ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறார் ஆபாச படம் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். சிறார் ஆபாச படம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்துகிறோம், “இவ்வாறு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!