Skip to content
Home » ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

  • by Senthil

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊட்டச் சத்து மாத விழா-2024 விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி துவக்கி வைத்து, ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.

ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100 அங்கன்வாடி மைய பணியாளர்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து மிக்க பாரதத்தை உருவாக்க ஒன்றாக இணைவோம், ரத்த சோகை நீங்க சத்தான உணவை அறிந்திடுவோம், சிறுதானிய உணவை தினமும் சேர்த்திடு சிறந்த வாழ்வை பெற்றிடு, ஆரோக்கிய கல்வி நமது அங்கன்வாடி கல்வி, ஊட்டச்சத்து திட்டமே உன்னதமான வாழ்வின் அடையாளமே, ஊட்டச்சசத்துடன் இருந்திடு உன் உடல்நலத்தை காத்திடு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர்.

மேலும், ஊட்டச்சத்து உணவுப் பொருள் கண்காட்சியில் 0-5 வரை குழந்தைகளின் சராசரி எடை மற்றும் உயரம், இரத்த சோகை, சக்தி தரும் உணவுகள், வளர்ச்சி தரும் உணவுகள், சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள், சத்தான உணவுகள், சத்தான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்து தகவல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.  எனவே, பொதுமக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார்.

முன்னதாக, ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வாசிக்க, அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.பாலசுப்பிரமணியன், அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!