மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ்(55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பார்த்துள்ளார். வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ் உள்ளே சென்று எடுத்துவந்து காட்டியபோது டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
பின்னர், நகைகளை பார்த்தபோது, அந்த இளம்பெண் பார்த்துகொண்டிருந்த டிசைனில் இருந்த சில நகைகள் காணாமல்போனது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸார் சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வுசெய்து நகையை திருடி சென்ற ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த இவாஞ்சலின்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.