இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தந்தது. ரோகித் சர்மா 6 ரன்னுக்கு அவுட்டாக, சுப்மன் கில் ‛டக் ‘ அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன் மட்டும் எடுத்து திரும்ப, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரிஷாப் பன்ட் 39 ரன் எடுத்தார். அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 56 ரன்னில் அவுட்டானார். ராகுல் (16) நிலைக்கவில்லை. பின் வந்த அஷ்வின், ஜடேஜா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா அரைசதம் எட்டினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 6வது சதம் அடித்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 339 ரன் எடுத்திருந்தது. அஷ்வின் (102), ஜடேஜா (86) அவுட்டாகாமல் இருந்தனர்.