கரூரில், 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர். சேகரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் எம்.ஆர். சேகர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல, நிலத்தை பறிகொடுத்த பிரகாஷை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சகோதரர் எம்.ஆர். சேகர் உள்ளிட்டோர் கடத்திச் சென்று அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீசாரும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இம்மாதம் 2-ம் தேதி சிபிசிஐடி போலீசாரால்
கரூரில் கைது செய்யப்பட்ட எம்.ஆர். சேகர், திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்காக
கடந்த 11ம் தேதி நீதிமன்ற காவலில் இருக்கும் சேகரை வாங்கல் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் எம்.ஆர். சேகரை வாங்கல் போலீசார் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த மனு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் – 1 ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஆர். சேகரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன் பேரில் சேகரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று 2ம் நாளாக விசாரணை நடக்கிறது.