கடந்த 2014 ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருந்தது.
இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும் போது இந்த திட்டம் குறித்து வலியுறுத்தி பேசினார். சட்ட கமிஷனும் இது குறித்த அறிக்கைகளை விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும். இந்நிலையில், ‘ ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த ராம்நாத் கோவிந்த்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இது குறித்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆலோசனைக்கு பிறகு 18, 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமே. இதனை அமல்படுத்துவதற்கும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தால் அல்லது தொங்கு சட்டசபை அமைந்தால் மீண்டும் தேர்தல் நடத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.